வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில் நேற்றைய முன் தினம் (செப் 21) மாலை சுமார் 4 மணியளவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில் கழிஞ்சூரைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை அணிந்து, சினிமா பாடலுக்கு அவரது நன்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஆசிர் தங்கராஜ், விருதம்பட்டு காவல் நிலையத்தில் இஸ்லாமிய மதத்தினரைப் புண்படுத்தும் வகையில், அவர்கள் அணியும் ஆடையை அணிந்து, கலகம் மற்றும் கிளர்ச்சி உருவாக்கும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த விருதம்பட்டு காவல் துறையினர், வெறுப்பைத் தூண்டும் வகையில் நடனம் ஆடிய அருண்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும், அருண்குமார் உடன் நடனமாடிய அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு!