வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் களர்பாளையம் பகுதியில் வசித்துவரும் வேலாயுதம் என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவு புகுந்த சிறுத்தையை சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மீட்டனர்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த வன அலுவலர் பார்கவ தேஜா கூறுகைல்யில், “இது 5 வயதான ஆண் சிறுத்தை. இந்த கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் அருகாமையில் உள்ள குண்டலபள்ளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
பிடிபட்ட பிறகு அதனை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டுவிட்டோம். இந்த பணிக்கு இக்கட்டான சூழலில் வன விலங்குகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டார். அவரே இந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தார். மேலும், சிறுத்தை நலமுடன் உள்ளது. மீண்டும் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.
இது குறித்து வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் கூறுகையில், “இன்று அதிகாலை மாவட்ட வன அலுவலர் எனக்குத் தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில் சிறுத்தையைப் பிடிப்பதற்கு சம்பவ இடத்திற்கு விரைந்தோம். சிறுத்தை இருந்த இடம் மிகவும் சிறிய வீடு அதை நெருங்குவதற்கு போதிய இடம் இல்லை.
மிகவும் நெருக்கடியான இடத்தில் வேலை செய்தது முதலில் கடினமாக இருந்தது. இருப்பினும் மாவட்ட வன அலுவலரிடம் கலந்து பேசி ஒரு யுத்தியை வகுத்தோம். அதன்படி இந்த சிறுத்தை பதுங்கியிருந்த இடத்தில் ஜன்னல் போன்ற எந்த அமைப்பும் இல்லாததால் அதை மயக்கமடையச் செய்வது சவாலாக இருந்தது. எனவே அது இருந்த அறையின் சுவற்றில் ஒரு துளையிட்டோம். அப்போது, அந்த சிறுத்தை அதன் அறையிலிருந்து சற்று வெளியே வந்தது. அச்சமயத்தில் மயக்க மருந்து செலுத்தி பிடித்தோம்.
பிறகு சிறுத்தையை அந்த அறையில் வைத்து தாளிட்டு அதன் பிறகு யாருக்கும் அடிபடாத வண்ணம் நெருங்கி சென்று பிடித்து கூண்டில் அடைத்தோம். தொடர்ந்து உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் எவ்வித காயமும் இல்லை என்றும் உறுதியானதை அடுத்து அடர் காட்டில் சிறுத்தை விடப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை: மூவருக்கு காயம்!