வேலுார் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் தரப்புக்கும், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு தரவேண்டிய கமிஷன் பணத்தை தரவில்லை எனக்கூறி ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பினர் மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று திடீரென்று ஜெயபிரகாஷ் சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு சென்றார். இதனையறிந்த அமைச்சர் ஆதரவாளர்களும் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வேலுார் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது, ஜெயபிரகாஷிடம் இன்ஸ்பெக்டர் திருமால், 'இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நான் அதை விசாரித்து வருகையில், எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் பிரச்னை வேறுமாதிரி ஆகிவிடும்' என எச்சரித்தார்.
அதற்கு ஜெயபிரகாஷ் இது தனது நிலம், நான் ஏன் இங்கிருந்து செல்லவேண்டும் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் ஒருவழியாக ஜெயபிரகாஷை சமாதானம் செய்து காவல் துறையினர் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.