வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்-சத்யா தம்பதிக்கு லத்திகா(7), ஹாசினி(3) மற்றும் கீர்த்திகா என்ற ஒன்றை மாதத்தில் ஒரு பெண்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கர்ப்பமாகியிருந்த சத்யாவிற்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ச்சியாக பெண் குழந்தைகளாக பிறக்கிறது என்று மன வேதனையடைந்த சத்யா கடந்த 22.07.2016 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலில் விஷம் கலந்து தனது மகள் ஹாசினிக்கும் ஒன்றரை மாத பெண்குழந்தைக்கும் கொடுத்துள்ளார். இதில் அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இதன் பின்னர் சத்யாவும் விஷம் கலந்த பாலை குடித்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சத்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப்பின் சத்யா உயிர்பிழைத்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கு சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,குற்றவாளி சத்யாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பளித்தார்.
வழக்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையிலேயே சத்யாவிற்கு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உயிரிழந்த ஹாசினியின் பெயரையே சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை