வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாந்தி. இவர் இன்று அதிகாலை அவரது மகன் ராஜசேகரனுடன் தனது குடிசை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து கன நேரத்தில் பக்கத்தில் இருந்த மூன்று குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதில் சாந்தி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ராஜசேகரன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராணிப்பேட்டை தீயணைப்பு காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
பின்னர் பலத்த காயமடைந்த ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.