வேலூர்: சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாநகராட்சி, உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் நடத்தும் மாநில அளவிலான ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு வாலிபால் விளையாட்டுப் போட்டியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் யூ டியூப் பிரபலம் ஜி.பி.முத்து ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
ஜி.பி.முத்து, விளையாட்டு வீரர்களுடன் சிறிது நேரம் வாலிபால் விளையாடி உற்சாகப்படுத்தினார். இன்று மற்றும் நாளை நடைபெறும் இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 150 பேர் பங்கேற்று உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்ளுக்கு முதல் பரிசாக 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக 15 ஆயிரம், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் மற்றும் இதர பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர், கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசம் என்பது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியாது. இந்தியாவில் ஆந்திரா ஒரு நாடு, பஞ்சாப் என்பது ஒரு நாடு, தமிழ் நாடு என்பது ஒரு நாடு இவை எல்லாம் ஒன்று இணைந்தது தான் இந்தியா. இந்தியா என்பது நாடு அல்ல இந்தியா ஒரு தேசம். நாடுகளின் கூட்டமைப்பு தான் தேசம். ஆகவே தமிழ்நாடு என்பதும் தமிழகம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று பா.ஜ.க கூறுவது ஏற்றுகொள்ளமுடியாத ஒன்று. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு முதல்வர் வாழ்த்துகள் சொல்கிறார். அப்போது,பொங்கல் பண்டிகையை பா.ஜ.க இந்துகள் பண்டிகையாக கருதவில்லையா? என்று கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி, தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க வினர் தமிழர்கள் பண்டிகையை இந்துக்கள் பண்டிகையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் வேறு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
கமலஹாசன் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. கமலஹாசன் ஒரு தேசிய உணர்வு உடைய தமிழர். சீர்கருத்துக்களை உடையவர். இன்றைய காலகட்டத்தில், ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமலஹாசன் உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடு தான் கமலஹாசன் ராகுல் காந்தி சந்திப்பு ராகுல் காந்தி மற்றும் கமலஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது” என்றார்.
இதையும் படிங்க: காரை டெலிவரி செய்யாமல் கடத்திய நபர்கள்.. ஆன்லைன் மூலம் மோசடி வலை..