வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கிருஸ்டியான் பேட்டையில் செயல்பட்டுவந்த தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை தமிழ்நாடு அரசால் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
இந்நிலையில், அண்மை காலமாக தமிழ்நாடு - ஆந்திர எல்லை பகுதியில் சுற்றித்திரிந்து வரும் யானை கூட்டம் இன்று தொழிற்சாலையின் கேட், மதில் சுவர் ஆகியவற்றை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள குட்டையில் நீர் அருந்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.
காட்பாடி நகர் பகுதிக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் உடனடியாக வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பலமனேரி காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய இரண்டு குட்டி யானைகள் உட்பட 14 காட்டு யானைகள் குடியாத்தம் பகுதிக்கு வரும்போது அங்கிருந்து துரத்தப்பட்டு வழி தவறி 14 யானைகள் கொண்ட கூட்டம் கடந்த 20 நாள்களாக ஆந்திர பகுதியிலும் தமிழ்நாடு எல்லை காட்டுப்பகுதியிலும் மாறி மாறி முகாமிட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, 20 பேர் கொண்ட வனத்துறையினர் இரண்டு பிரிவாகப் பிரிந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் சேர்மன் பதவி விவகாரம்: அமைச்சர் எஸ். வளர்மதி வீடு முற்றுகை