வேலூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரயில் இன்று (ஜூலை 02) வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் சந்திப்புக்கு வந்தபோது, அதனை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த 4 பைகளை எடுத்து சோதனை செய்ததில், 42 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் மதுசூதனன் தலைமையிலான காவலர்கள் கஞ்சாவை கைப்பற்றி காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அது காட்பாடி காந்திநகரில் உள்ள போதை நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ. டி. ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து கஞ்சா எப்படி ரயிலில் வந்தது? யார் வைத்தார்கள்? என்பது குறித்து காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் என ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தெரிவித்தனர்.