சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மூன்று நாட்களாக தொடர் முழக்க போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்பு, அலுவலகத்திற்கு வரும் வழியில் பேரிகார்டு அமைத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், திட்டமிட்டபடியே இஸ்லாமியர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்று கூடினார்கள்.
சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். குறிப்பாக சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடக்கூடாது என்றும், முற்றுகையிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை முழக்கங்களை மட்டும் பேசிவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்: சிஏஏவை வாபஸ் பெறவிட்டால் போராட்டம் தொடரும்! - திருச்சி மைதானத்தில் அதிரும் முழக்கம்