வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை அத்தனாவூரைச் சேர்ந்தவர் குட்டி. இவருக்கும் கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்டி, பொதுஇடத்தில் வைத்து பணம் கேட்டு அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய குட்டியின் 9 வயது மகனான ராகேஷ் குமாரை(9) கடத்திச் சென்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் தள்ளிக் கொலை செய்தார்.
இது குறித்து குட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏலகிரி மலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெருமாள், அவரது தோழி காளியம்மாள்(36) ஆகிய இருவரையும் கைது செய்து, திருப்பத்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூர் நீதி மன்றத்தில் நடந்து வந்தநிலையில், இருவரும் பிணை பெற்று தலை மறைவானார்கள். நீதிபதி உத்தரவின் பேரில் தலை மறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நீலாவூரில் பதுங்கியிருந்த இருவரையும் ஏலகிரி மலை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதையும் படிங்க;காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது