வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான ரசாயன பொருட்கள் மற்றும் பெட்ரோலிய எரிபொருட்களின் சேமிப்பு கிடங்கு உள்ளது.
இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில் மூலமாக ரசாயன பொருட்கள் பெட்ரோலியம் உள்ளிட்டவை கொண்டுவருவது வழக்கம். இந்த நிலையத்தில், இன்று பெட்ரோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றிவந்த சரக்கு ரயில் ஒன்று குடோனில் சரக்குகளை இறக்கிவிட்டு, பிரதான ரயில் பாதையில் இணையும்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தால் சென்னையில் இருந்து பெங்களூர் மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்களும் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து தடம் புரண்ட ரயிலை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து ரயில் போக்குவரத்து பாதிக்காத வகையில் மாற்று பாதையில் தொடர்ந்து ரயில்கள் இயங்கின.