மருத்துவர்கள் சரியாகப் பணிக்கு வரவில்லையென்றால் டிஸ்மிஸ் தான் - எச்சரித்த அமைச்சர் துரைமுருகன் - AIADMK government spent money on name
மருத்துவர்கள் சரியாக பணிக்கு வரவில்லையென்றால் நான் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்: காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விண்ணம்பள்ளி, வள்ளிமலை, பொன்னை ஆகிய அரசுப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ’பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் தூய்மையற்ற நிலையில் இருக்கிறது. மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புகார்களும் பலமுறை வந்தது. நானும் எச்சரித்தேன். நான் எந்த அலுவலர்களையும் பழிவாங்குவது கிடையாது. ஆனால் இப்பிரச்னையால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மருத்துவர்கள் இனியும் சரியாக நடக்கவில்லை என்றால் நான் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். மருத்துவர்கள் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விளங்காமல் செய்ய பாடுபடுகின்றனர். இதனை அவர்கள் மாற்றிகொள்ள வேண்டும்’ எனப்பேசினார்.
இதன் பின்னர் பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை அமைச்சர் துரைமுருகனை அழைத்துகொண்டு சென்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது ஒரு சில அறைகள் திறக்கப்படாமலும் சரியாக பராமரிக்கப்படாமலும் இருந்தது.
அதனை சரி செய்ய உத்தரவிட்டார். அப்போது பணியில் ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் இருந்தார். மற்றவர்கள் மருத்துவர்கள் எங்கே என கேட்ட ஆட்சியர், பின்னர் ஆய்வகத்தையும் ஆய்வு செய்து, அதனை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’அத்திக்கடவு அவினாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார். அவருக்கு நான் தெரிவிக்கிறேன் சரபங்கா திட்டமானாலும் அத்திகடவு அவினாசி திட்டமானலும் எங்காவது ஒரு இடத்திலாவது நீரை கொடுத்தாரா? பெயருக்கு பணத்தை செலவு செய்தனர். ஆனால் உருப்படியான காரியத்தை செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் அவர்கள் இந்த திட்டங்களுக்காக நில ஆர்ஜிதமே செய்யவில்லை’ என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க:இந்திய பால்வளத் துறையின் மதிப்பு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்