ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடிப்பது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி சாம்பல் புதனன்று தவக்காலம் துவங்கியதையடுத்து, கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் புனித வாரம் ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து தவக்காலத்தின் முக்கிய நாளான இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைப்பாதைகள் நடைபெறுகின்றன. மேலும், இன்று ஏசு நாதரை சிலுவையில் அறைந்து அடக்கம் செய்யும் நிகழ்வும் அனைத்து தேவாலயங்களிலும் நடைபெறும்.
இதனை அனுசரிக்கும் விதமாக வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஏசுநாதரை சிலுவையில் அறையும் சிலுவை நிகழ்வு பாதை அந்த ஆலயத்தின் இளைஞர்களால் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாடு ஆராதனை அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி, ஜான்பீட்டர் ஆகிய அருட்தந்தைகளின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு முழங்காலிட்டு பாடல்கள் பாடி வழிபட்டனர்.