வேலூர்: Earth Quake at Vellore: கடந்த நவம்பர் 29ஆம் தேதி குடியாத்தம் அடுத்த தட்டப்பாரை, மீனூர், கொல்லை மேடு உள்ளிட்ட பகுதியில் அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலரது வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
அதன்பின்னர் கடந்த 23ஆம் தேதி பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3.5ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மூன்றாவது முறையாக டிசம்பர் 25ஆம் தேதி நில அதிர்வு உணரப்பட்டது. சில நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் 40 வீடுகள் பாதிக்கப்பட்டன.
நேரில் ஆய்வு
இந்த நிலையில் நில அதிர்வு உணரப்பட்ட தட்டப்பாரை, மீனூர், கொல்லை மேடு உள்ளிட்ட பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த உதவி புவியியலாளர் அமீஸ், சென்னையைச் சேர்ந்த புவியியலாளர் சிவக்குமார், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் கணபதி ஆகியோர் நில அதிர்வு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
விரிசல் ஏற்பட்ட வீடுகள், அருகில் உள்ள ஆற்றுப்படுகை, மலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடமும் நில அதிர்வு உணரப்பட்டது குறித்து கேட்டறிந்துவருகின்றனர்.
ஆய்வு குறித்து புவியியலாளர் சிவக்குமார் கூறுகையில், "இங்கு முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. இரண்டாம்கட்ட ஆய்வில் இயந்திரம் பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வு இரண்டு வாரங்கள் நடைபெறும். ஆய்வுக்குப் பின் நில அதிர்வுக்கான காரணம் குறித்து தெரியவரும். இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த வடகிழக்குப் பருவமழை, வெள்ளம்கூட நில அதிர்வுக்கு காரணமாக இருக்கக்கூடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீதர் வேம்புவின் வீடு தேடிச் சென்ற பத்மஸ்ரீ விருது...!