வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் உதயகுமார் என்பவர் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உதயகுமார் ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜூலை 2ஆம் தேதி புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதுகுறித்து ராணுவ வீரர் உதயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பிணை மறுக்கப்பட்டது.
தொடர்ந்து உதயகுமாரை வேலூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிபதி (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்) முன்பு இரண்டு வாரத்திற்குள் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதனையடுத்து நேற்று (ஆகஸ்ட் 10) வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிபதி முன்பு உதயகுமார் ஆஜரானார்.
அப்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வழக்கறிஞர், உதயகுமாருக்கு பிணை வழங்கக்கூடாது என வாதிட்டதை அடுத்து, உதயகுமாரை விசாரித்த நீதிபதிகள், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி தீர்ப்பளித்தனர். இதனையடுத்து ராணுவ வீரர் உதயகுமாரை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை மணமுடித்து பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!