ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், சஞ்சனா ஸ்ரீ (2), ரித்திகா ஸ்ரீ (1) என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 02) நிர்மலாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிர்மலா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவலறிந்து வந்த சோளிங்கர் காவல் துறையினர் நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அறிந்த வெங்கடேஷ், நிர்மலாவின் சடலத்தை பார்த்துவிட்டு துக்கம் தாங்காமல், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை ரயில்நிலையத்துக்கு சென்று ஓடும் ரயில் முன் பாய்ந்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் வெங்கடேஷ், சஞ்சனா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றிய வாலாஜாபேட்டை காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை