வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய வட்டங்களுக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் நடைபெறுவது வழக்கம். இந்தக் குறைதீர்க்கும் நாள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெறவில்லை.
இந்நிலையில் திருப்பத்தூர் சார் ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் வந்தனாகர்க், நவம்பர் 13ஆம் தேதி விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் நடைபெறும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் சார் ஆட்சியர் திடீரென அரசுப் பணி காரணமாக வேலூர் சென்றதால் நேற்று நடைபெறவிருந்த கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆகவே சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் குறைதீர்க்கும் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துங்கள் என்று தெரிவித்துவிட்டு சார் ஆட்சியர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள் இதற்கு முன் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறிய கோரிக்கைகள் எதுவும் நடக்கவில்லை, இதில் சார் ஆட்சியரின் உதவியாளரிடம் கூறி எந்தப் பயனும் இல்லை என்று சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதையும் படிங்க: வங்கியில் பணம் செலுத்த வந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை