வேலூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர், பர்வேஷ் அகமது (53). இவர் சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி, பெங்களூருவில் விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் பொருட்களை வாங்க இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பொருட்கள் இருப்பு இல்லாததால், காட்பாடியைச் சேர்ந்த சங்கர் என்பவரைத் தொடர்பு கொள்ளும்படி கூறி, அவரது செல்போன் எண்ணையும் அவர் கொடுத்துள்ளார்.
அதன்படி, சங்கரைத் தொடர்பு கொண்டபோது காட்பாடிக்கு நேரில் வரும்படி கூறியுள்ளார். இதை அடுத்து, பெங்களூருவில் இருந்து பர்வேஷ் அகமது தனது காரில் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை காட்பாடியில் சங்கரைச் சந்தித்துள்ளார். அப்போது, திருவலத்தில் உள்ள கிடங்கில் பொருட்கள் இருப்பதாக சங்கர் கூறியதன் பேரில், அவரது காரில் பர்வேஷ் மற்றும் அவரது நண்பர்கள் புறப்பட்டுள்ளனர்.
மேலும், காரில் வைத்து ரூ.7.40 லட்சம் ரொக்கப் பணத்தை சங்கரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த கார் அம்முண்டி அருகே சென்றபோது, மற்றொரு கார் குறுக்கே வந்து நின்றுள்ளது. அந்த காரில் காவலர் சீருடையில் இருந்த ஒருவர் உள்பட 4 பேர், பர்வேஷ் அகமது அமர்ந்திருந்த காருக்கு வந்துள்ளனர்.
அப்போது, பர்வேஷ் அகமது மற்றும் அவரது நண்பர்களை விசாரணைக்காக காரில் இருந்து கீழே இறங்கும்படி அவர்கள் கூறியுள்ளனர். அதை நம்பி அவர் கீழே இறங்கியதும், காவலர் சீருடையில் இருந்த மர்ம நபர்கள் காரில் ஏறியுள்ளனர். சில நிமிடங்களில் அந்த காரும், மற்றொரு காரும் அங்கிருந்து திடீரென வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதனை அடுத்து, காட்பாடி காவல் நிலையத்தில் பர்வேஷ் அகமது புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், காவலர் சீருடையில் வந்து பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட கார் விருதம்பட்டு அருகே வேலூர் பழைய மாநகராட்சி அருகில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பெங்களூரு வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் சங்கர், மணிவண்ணன், சீனிவாசன், முருகன் அவரது மனைவி லட்சுமி, சிவா, பொன்ராஜ், சந்தோஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து நான்கு கார்கள் மற்றும் ரூ.7.40 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வியாபாரிகளிடம் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கையுடன் பணம் எடுத்து வந்தால் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் எனவும், வியாபாரிகளை அழைத்து போலியான போலீஸ் சீருடையில் உள்ள நபர்களை வரவழைத்து, பாதி வழியில் பணத்தைக் காவல் நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறி காரையும், பணத்தையும் கொள்ளையடித்துச் செல்வது இவர்களுக்கு வாடிக்கை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த திருட்டு கும்பலுக்கும், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கும் தொடர்பு உள்ளது என்பதும், இவர்கள் மீது ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் மீட்பு!