வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த 57 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 24.07.2020 அன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இவர் கரோனாவால் உயிரிழந்ததாக சான்று அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்லாமல், நேரடியாக மயானத்திற்கு எடுத்து சென்று உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10.08.2020-ஆம் தேதி உயிரிழந்த மூதாட்டியின் கணவர் செல்போன் எண்ணுக்கு கரோனா பரிசோதனை "நெகட்டிவ்" என வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இன்று (15.08.20) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு ஒன்றினை அளித்தனர்.
அதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டதால் அவரது உடலை கூட பார்க்க முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினர். இவ்வாறாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மதுரையின் இன்றைய கோவிட்-19 பாதிப்பு நிலவரம்!