தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 38 பேர், அதிவிரைவு படையைச் சேர்ந்த 28 பேர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பூகம்பம் ஏற்பட்டவுடன் அடிக்கும் எச்சரிக்கை ஒளியுடன் தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சியின்போது இடர்பாடுகளில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, தீயணைப்பு துறையினர் தீயுடன் போராடுவது, நவீன உபகரணங்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, குழந்தைகள் மீட்பு அவசரகால முதலுதவி சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய அரக்கோணம் படையணி தலைவர் நம்பியார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்கள் நோக்கம் என குறிப்பிட்டார்.
மேலும் ஒத்திகை குறித்து பேசிய மாணவர்கள், நிகழ்ச்சியை பரவசத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டுகளித்ததாகவும், இத்தகைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் பேரிடர் காலங்களில் நம்மை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களையும் காக்க இது உதவும் என தெரிவித்தனர்.