வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாவடி தெருவில் வசிப்பவர் ரவி. இவர் தனது வீட்டிலேயே சட்டவிரோதமாக சாயப்பட்டறை அமைத்து நூல்களுக்குச் சாயம் பூசும் தொழிலில் ஈடுபட்டுவந்தார்.
பொதுவாக வேலூர் பாலாற்றின் அருகே ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் சாயப்பட்டறை அமைக்கக் கூடாது என்பது விதி. ஆனால் இவர் விதியை மீறி ஒரு கிலோ மீட்டருக்குள் சாயப்பட்டறை அமைத்திருந்தார். அதுமட்டுமின்றி சாயக் கழிவுகளைப் பாலாற்றில் வெளியேற்றி வந்துள்ளார்.
இது குறித்து சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவின்பேரில், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ், சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் புனிதா, வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ரவியின் வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையை சாயப்பட்டறையாக மாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக சாயம் பூசும் தொழில் செய்ததால் அவ்வீட்டின் அறைக்கு வருவாய்த் துறையினர் சீல்வைத்தனர்.