வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்றிரவு தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்துவதன் அவசியம் என்ன என்று கேட்டனர்.
மேலும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பின்வாங்கிச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் உயரதிகாரியை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தனர். பின்னர், சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பிறகு மற்றொரு சோதனை அனுமதி கடிதத்தை பெற்று விட்டு மீண்டும் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றனர். இதற்கிடையில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டத்துறை செயலாளர் பரந்தாமன் மற்றும் முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வேலூர் முழுவதும் நேற்றிரவு விடிய விடிய பதற்றம் நீடித்தது. ஒரு வழியாக வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜய் தீபன் தலைமையில் அதிகாரிகள் மனோஜ், சதீஷ், முரளி ஆகியோர் அதிகாலை 3 மணியளவில் துரைமுருகன் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை தொடங்கினார். சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் வெளியே வந்தனர் ஆனால் அவர்கள் கையில் ஆவணங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், இந்த சோதனை குறித்து துரைமுருகன், வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், "நான் வேலூரில் ஒரு மாநாடு ஒன்றில் பேசிவிட்டு இருந்தேன் அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது உங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருக்கிறார்கள். உடனே நான் அங்கு சென்றேன், என் வீட்டில் 3 பேர் இருந்தனர் அவர்களிடம் நீங்கள் யார் எதற்காக வந்தீர்கள் என கேட்டேன் அதற்கு அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றனர். அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன், யாரோ ஒருவர் ஒரு கார்டை நீட்டினார்.
இப்படி யார் வேண்டுமானாலும் காட்டலாம் வீட்டில் நுழைந்து சோதனை நடத்த அனுமதி கடிதம் உள்ளதா என கேட்டேன். அவர்கள் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்தவர்கள் என்றனர். அதற்கு நாங்கள் முதலில் நீங்கள் வருமானவரித்துறையா அல்லது தேர்தல் பறக்கும்படையா என்பதை தெளிவாக சொல்லுங்கள் இப்படி பேசினால் எப்படி வீட்டிற்குள் அனுமதிக்க முடியும் என்று கேட்டோம், பிறகு அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மற்றொரு உத்தரவு கடிதத்தை வைத்துக் கொண்டு மீண்டும் சோதனை நடத்த வந்தனர்.
நாங்களும் அனுமதி அளித்தோம், அவர்களும் நிறைய இடங்களில் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. நான் ஒன்றும் பெரிய கார்ப்பரேட் கம்பெனி நடத்தவில்லை சாதாரண கல்லூரி தான் நடத்தி வருகிறேன் எனது வீட்டில் நுழைந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவே இதை தடுக்க கவனத்தை திசைதிருப்பிவிட வேண்டும் என்று எங்களை பயமுறுத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
களத்தில் எதிர்க்க திராணி இல்லாமல் மத்திய, மாநில அரசுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் சில கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள்(ஏ.சி.சண்முகம்) செய்யும் சூழ்ச்சி தான் இந்த சோதனை. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் வருமானவரித்துறை சோதனை மூலம் முதுகில் குத்த பார்க்கிறார்கள். ஆனால், இந்த மிரட்டலுக்கு பூச்சாண்டி தனத்திற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் அடக்குமுறையை சந்தித்தவர்கள். இது போன்று வருமானவரித்துறை ஏவி விட்டால் நாங்கள் பயந்து மோடிக்கு ஜே என்று சொல்லிவிடுவோம் என்று மோடி ஒரு தப்பான கணக்கு போடுகிறார். இது ஜனநாயக நாடு. இப்படி தப்புக்கணக்கு போட்டவர்கள் எல்லாம் தோற்றுப் போய்விட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.