தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் அண்ணா சாலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏக்கள் நந்தகுமார், காத்தவராயன் உட்பட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது. அவ்வாறு தண்ணீர் கொண்டு சென்றால் திமுக மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். வேலூர் மாவட்ட திமுகவினர் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வார்கள்" என்று பேசினார்.
மேலும், "மக்கள் தண்ணீர் கேட்டு ஆள்பவர்களிடம் முறையிடுகின்றனர். ஆனால் அவர்களோ, தங்களால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்பதால் ஆண்டவனிடம் முறையிடுகிறார்கள். தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்பதை இதிலிருந்து அரசு ஒத்துக் கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏரி குளங்களைக்கூட தூர் வாரவில்லை” என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.