வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் என்பவரது தலைமையில், பெருமுகை அருகே உள்ள மலைப் பகுதிகளில் 20 ஆயிரம் விதை பந்துகளை வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் தனி வட்டாச்சியர் விஜயன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மலைகளில் விதைப் பந்துகளை வீசி இந்த நிகழ்ச்சியை தொங்கி வைத்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர், தன்னார்வலர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு, விதைப் பந்துகளை வீசினர்.
அப்போது பேசிய தினேஷ் சரவணன் "தமிழ்நாட்டில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதியாக வேலூர் மாவட்டம் அறியப்படுகிறது.
வேலூரை சுற்றியுள்ள மலைகளின் எண்ணிக்கையே இதற்கு காரணமாகிறது. வெயில் காலங்களில் மலை மீது படக்கூடிய வெப்பம் பிரதிபலித்து வேலூரின் நகர் பகுதிகளில் வெப்பத்தை அதிகரிக்கின்றது. எனவே மலைகளின் மீது பசுமையான சூழலை உருவாக்கினால் வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம்.
விறகிற்காக மலைகளின் மீதுள்ள மரங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகிறன. இதனால் குறைந்து வரும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பசுமையான சூழலை உருவாக்கவும், விதை, மண் மற்றும் இயற்கை உரம் கொண்டு தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகளை வேலூரில் உள்ள மலைகளின் மீது வீசி வருகின்றோம்.
கடந்த 6 ஆண்டுகளாக இதனை தொடர்ந்து செய்து வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் விதைப் பந்துகளை வீசினோம். இந்த ஆண்டு 1 லட்சம் விதைப் பந்துகளை வீசலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் கரோனா தொற்று காரணமாக, 20 ஆயிரம் விதைப்பந்துகளை மட்டும் வீசியுள்ளோம். இந்த முயற்சியின் மூலம் இதுவரை சுமார் 5 லட்சம் விதைப் பந்துகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் வீசி உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: வேலூரில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்