வேலூர்: பேரணாம்பட்டு பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன், அருண் மற்றும் ராஜா. இவர்கள் மூவரும் அப்பகுதியில் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். சலவைத் தொழிலுக்கு உதவியாக 6 கழுதைகளை மூன்று பேரும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், 6 கழுதைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றதை அடுத்து, ஆந்திராவில் கழுதைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான மூன்று கழுதைகள், அருண் என்பவருக்குச் சொந்தமான இரண்டு கழுதைகளும் மற்றும் ராஜா என்பவருக்குச் சொந்தமான ஒரு கழுதையும் என 6 கழுதைகளும் காணாமல் போய் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மூன்று பேரும் பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணாமல் போன கழுதையைத் தேடி வந்த நிலையில், கழுதையின் உரிமையாளர் சரவணனுக்கு, இது போன்ற செயலில் ஈடுபடும் கும்பல் ஆந்திர மாநிலம் சிராலா என்ற ஊரில் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்திற்கு கழுதைகளைத் தேடிச் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் வளர்த்து வந்த ஆறு கழுதைகளில் ஐந்து கழுதைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவிற்கு விரைந்து சென்ற பேரணாம்பட்டு போலீசார், அங்கு இருந்த ஐந்து கழுதைகளை மீட்டுள்ளனர். மேலும் ஒரு கழுதையைக் கொன்று, இறைச்சியாக்கி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் ஆந்திர மாநிலம் சிராலா போலீசார் உதவியுடன் ஐந்து கழுதைகளையும் மீட்டு, பேரணாம்பட்டில் உள்ள உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடத்திச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை; இன்று 7 லட்சம் பேருக்கு ரூ.1,000 வரவு.. முதலமைச்சர் தலைமையில் விழா!