திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த வேலூர் சி.எம்.சி (CMC) தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சுனில் அகர்வால், அவருடன் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கேத்தாண்டபட்டி காவல் துறையினர், மருத்துவர்கள் மூவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மேல் சிகிச்சைக்காக சுனில் அகர்வால் மட்டும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுநர் கண் அயர்ந்ததால் வாகனம் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு