வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நெல்லை மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைதாகியுள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர்,
"சிபிஐ விசாரணை சென்று கொண்டிருக்கின்றது. இதில் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே திமுக பிரமுகர் ஒருவர் சிக்கியுள்ளார். திமுக ஒரு கொலை செய்கிற இயக்கம் என்று இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பதவியில் இல்லாதபோது ஒருமுறை மதுரைக்கு வந்தார். அப்போது திமுக அவரை கொலை செய்ய முயன்றுள்ளது. அப்படியானால் சாதாரண குடிமக்களின் நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.
பாலாற்றில் தண்ணீர் ஓடாததற்கு காரணமே திமுகதான். 16 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த போது இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.
சட்டம் ஒழுங்கை ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் கையில் எடுப்பதில் திமுக போன்ற ஒரு கட்சி கிடையாது.
மேலும், அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி எல்லாம் அதிமுகவை அடிமைகள் என்று சொல்கிறார். இவர்கள் எத்தனை ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.
திமுக அதிகார வெறிபிடித்த இயக்கம். அவர்கள் எவ்வளவு முயன்றாலும் இனி நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.