வேலூர் மாநகராட்சி முழுமையாக மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, உணவு அத்தியாவசிய பொருள்களான பெட்ஷீட், சோப்பு மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின் போது பெரிதாக சாதித்து விடுவதுபோல் பேசிவிட்டுச் சென்றார். தற்போது புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய தொகையை தமிழ்நாடு அரசு அவரிடமே கேட்டு பெறட்டும். மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எந்தப் புயலுக்கும் வெளியே செல்லாத முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் நேரம் என்பதால் கடலூருக்கு சென்றிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் மோர்தனா அணையிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் 10 ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாயை தூர்வார சொல்லி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆனால், மாவட்ட ஆட்சியர் அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தண்ணீர் தற்போது வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது. இதே நிலைதான் தமிழ்நாட்டிலும் உள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: நிவர் புயலால் சேதமடைந்த படகுகளுக்கு அறிக்கையளித்த பின் நிவாரணம் அறிவிக்கப்படும்!