வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ளது. ஏ.சி. சண்முகம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படவில்லை என அவரின் வேட்புமனுவும், கதிர் ஆனந்த் வீட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என சிறிய கட்சிகள் முறையிட்டதைத் தொடர்ந்து அவரின் மனுவும், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட பரிசீலனைக்கு பிறகு இருவரின் வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறுகையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக வேட்பாளர் மனு மீது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது" என்றார்.
இரு முக்கிய கட்சிகளின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.