தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் மம்ப்ஸ் (Mumps) பாதிப்பு அதிகரித்துள்ளது. தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா தடுப்பூசி (MMR Vaccine) குழந்தைகளுக்கு போடாதது தான் இந்த மம்ப்ஸ் தொற்றுக்கு வழிவகுப்பதாக லண்டனின் National Health Service தெரிவித்துள்ளது.
பொன்னுக்கு வீங்கி (Mumps) என்றால்?: சின்ன அம்மை, தட்டம்மை வகைகளில் ஒன்று தான், மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி. பொதுவாக, கழுத்து பகுதியில் இருக்கும் எச்சில் சுரப்பியில் (Parotid Gland) வைரஸ் தொற்று ஏற்படுவதால், கழுத்து பகுதி வீங்கி காணப்படும். அந்த காலங்களில், மம்ஸ்ப் தொற்று ஏற்பட்டால், கழுத்தில் தங்க செயின் போட்டு விடுவது வழக்கமாக இருந்தது. இதனால், தான் இதற்கு பொன்னுக்கு வீங்கு என்ற பெயரும் வந்துள்ளது.
அறிகுறிகள்: இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், உடம்பில் உள்ள சுரப்பிகளை பாதிக்கும். குறிப்பாக, கழுத்து பகுதியில் உள்ள எச்சில் சுரம்பியில் எளிதாக தொற்று ஏற்படும்
- காய்ச்சல்
- உடம்பு வலி
- கழுத்து பகுதியில் வலியுடன் வீக்கம்
- எச்சில் முழுங்குவதில் சிரமம்
- வாந்தி
- தலைவலி
சிகிச்சை: பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தானாகவே குணமாகிவிடும் என்கிறது நேஷ்னல் ஹெல்த் சர்வீஸ். பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு, கழுத்தில் வேப்பிலை அரைத்து தேய்ப்பது, தங்க செயின் போடுவது போன்றவற்றை பின்பற்றுகின்றனர். இதனால், மம்ப்ஸ் குணமாகாது என்றும் கூறப்படுகிறது.
ஆண் குழந்தைகளுக்கு பாதிப்பு: இதில் சிக்கலான நிலை இருக்கிறதா என்றால்?, தடுப்பூசி போடாத 100 ஆண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதில் 20 முதல் 30 குழந்தைகளின் டெஸ்டிஸை (testis) பாதிக்கிறது. இதனால், விதைப் பையில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதனால், பெரியளவில் பிரச்சனைகள் ஏற்படாது என்றாலும், விந்தனுக்கள் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் லேசான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், விதைப்பையில் வீக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 100ல் 1 குழந்தைக்கு கணைய பகுதியில் பாதிப்பும், அதே போல், மூளையில் பாதிப்பு (meningitis) ஏற்படலாம்.
வந்தால் என்ன செய்வது?:
- தண்ணீர் அதிகமாக குடிப்பது மற்றும் முழு நேர ஓய்வில் இருக்க வேண்டும்.
- இப்யூபுரூஃபன் (Ibuprofen) மற்றும் பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகளைப் பயன்படுத்துதலாம். (16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கக்கூடாது)
- வலியைப் போக்க, வீக்கம் உள்ள இடத்தில் சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம்.
- 12 முதல் 13 மாதங்கள் இருக்கும் குழந்தைக்கு MMR Vaccine 1 டோஸும், மூன்றாவது ஆண்டில் இரண்டாவது பூஸ்டர் டோஸும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பூசி போடுவதால், 88% மம்ஸ்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.
இதையும் படிங்க: மழைக்கால நோய்கள்...குழந்தைகள் முதல் பெரியவர்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரை!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்