தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புச் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றி காணப்படும் குழந்தைகளுக்கு உணர்வுப்பூர்வமான வகையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனமும் குழந்தைகள் நலச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இணைந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் உருவாக்கிய இந்த பூங்காவை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை பூங்கா வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஐந்து வயதிற்குள் பயிற்சி அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவே அதற்கு ஏதுவாக இந்த தொடு உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.