தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெய்யும், ஆனால் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலூரில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் மழை பெய்ய வேண்டி பெண்கள் பலர் பால் குடம் எடுத்து வழிபட்டனர்.
அதாவது காட்பாடி அடுத்த மோட்டூர் நகர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் 39ஆம் ஆண்டு சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் விநாயகர் கோயிலில் இருந்து மேள தாளம் முழங்க பால்குடம் ஏந்தி வீதிவீதியாக பக்திப் பரவசத்துடன் வந்தனர். பின்னர், திருவேங்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். 2001 சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் மாங்கல்ய சரடு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.