வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணா நகர் பகுதி வழியாகத் தான் முல்லை நகருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் கரோனா காலகட்டத்தில் இரண்டு தெருக்களின் நடுவே சுவர் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முல்லை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதற்கு தெரு நடுவே சுவர் கட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு கரோனா காலம் முடிந்த பின் இந்த சுவர் அகற்றப்படும் என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆனால் கரோனா காலம் முடிந்து பல மாதங்களாகியும் தடுப்பு சுவர் இடிக்கபடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் ரேஷன் கடைக்கு செல்வதற்கும் பல தெருக்களை சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. இது குறித்து சுவர் கட்டியவர்களிடம் சென்று பலமுறை முறையிட்டும் தடுப்பு சுவரை அகற்ற முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில் "முல்லை நகர் பகுதியில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும், கிறிஸ்துவர்களும் வசித்து வருவதால் இந்த சுவர் தீண்டாமை சுவர் போல இருக்கின்றது" என்க் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையில் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வருவாய்த் துறை காவல் துறை அதிகாரிகள் தெருவின் நடுவே கட்டப்பட்ட சுவர் அகற்றப்படுவது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக இரு பிரிவினரிடம் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வட்டாட்சியர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு சமூகத்தினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கரோனா காலகட்டத்தில் இரண்டு தெருக்களின் நடுவே கட்டப்பட்ட சுவர் இடிக்கப்பட்டது. இருந்த போதிலும் அப்பகுதியில் மீண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு
வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீட்டு மனை பதிவுக்கு புதிய விதிமுறைகள் அமலாகிறது!