வேலூர் மக்களவைத் தொகுதி வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் சூழலில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் இரு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் பிரமுகருமான வாலாஜா அசேன் ஏற்கனவே கடந்த வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், 'வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென வேலூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தார். மனு தாக்கல் செய்த பிறகு அவர் கூறியதாவது, "வேலூர் தொகுதியில் இருபெரும் அணியினர் இடையே போட்டி நிகழவுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்ததன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளேன்; எனது சுய விருப்பப்படியே தேர்தலில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார்
இச்சம்பவம் வேலூர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும், திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இரு கட்சிகளிடையே விரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.