வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 24 வார்டுகள் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் தூய்மை பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 12 வார்டுகளில் மட்டும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வயதான தூய்மை பணியாளர் ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் செல்லும் கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுகளை கையுறை, கால் உறை உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கையால் சுத்தம் செய்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் கால்வாயில் இறங்கியோ, செப்டிங் டேங்க், பாதாள சாக்கடை உள்ளிட்ட இடங்களில் இறங்கி வெறும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய கூடாது என சட்டம் இருந்தும் இம்மாதிரியான அவலநிலைகள் தொடர்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
இது குறித்து விளக்கம் கேட்க குடியாத்தம் நகராட்சி ஆணையர் நித்தியானந்தத்தை செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்ச்சித்தும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.
மேலும், இது தொடர்பாக 2013 சட்டம் வர போராடிய சபாய் கரம்சாரி ஆந்தோலன் அமைப்பை சேர்ந்த சாமுவேலிடம் பேசுகையில், 1993- சட்டம் உளர் கழிவுகளை (தனிநபர் கழிப்பிடம்) அகற்றுவதை மட்டும் தடை செய்திருந்தது. நாங்கள் தேசிய அளவில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து 2013ஆம் ஆண்டு சட்டத்தை கொண்டு வந்தோம். அந்த சட்டத்தில் வெறும் கையால் மலம் அள்ளக்கூடாது, பாதாள சாக்கடைக்குள் இறங்க கூடாது, செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது உள்ளிட்டவற்றை உள்ளே கொண்டு வந்தோம்.
மேலும் 2015 முதல் 2018 வரை யாரும் வெறும் கையால் மலம் அள்ளுபவர்கள் இல்லை. 462 பேர் மட்டுமே இது போன்ற பணிகளை செய்து வந்ததாக தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால் சபாய் கரம்சாரி ஆந்தோலன் அமைப்பு தமிழ்நாடில் நடத்திய ஆய்வில் 6 மாவட்டங்களில் சுமார் 3,019 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது போன்ற செயல்களால் ஆண்டுக்கு சராசரியாக 23 பேர் வரை உயிரிழக்கின்றனர். அரசு இதை இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இம்மாதிரியான அவல நிலை நீடிக்கிறது என்றார்.