வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கொள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுக்கரசி. பேராசிரியையான இவர் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது சொந்த வேலைக்காக உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தப்படி இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், அறிவுக்கரசி கழுத்தில் இருந்த மூன்று சரவன் தங்க நகையை பறித்துச் சென்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல்நிலையத்தில் அறிவுக்கரசி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.