வேலூர் மாவட்டம் கீழரசம்பட்டு கிராமத்தில் இன்று (ஜன. 17) மஞ்சுவிரட்டு எனப்படும் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் கீழ்ரசம்பட்டு, அமிர்தி, கணியம்பாடி, அனைக்கட்டு, அரியூர், ஒடுக்கத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
இவ்விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை ஒன்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரை குத்தி தூக்கி வீசியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்குள்ளவர்கள் அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோன்று காளைகள் குத்தி தூக்கி வீசியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். குறைந்த நேரத்தில் அதிக வேகமாக ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. இப்போட்டியினை சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க... காணும் பொங்கலையொட்டி புதுச்சேரியில் களைகட்டிய மஞ்சுவிரட்டு