வேலூர் மாநகர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பிரகாஷ் (26). அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (40). இவர் பிளக்ஸ் பேனர் கடை நடந்தி வருகிறார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59ஆவது வார்டில் பாமக சார்பில் கட்டட தொழிலாளி பிரகஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, பாமக தலைமை பிரகாஷுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்த தேர்தலில் இருவருமே தோல்வி அடைந்துள்ளனர். அதன் பின்னர் பாமகவில் இருந்து விலகிய ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தேர்தல் போட்டி காரணமாகவும், ஊர் கோயில் கும்பாபிஷேகதின் போதும் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் பிரகஷுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (பிப் 11) தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி அருகே பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து சென்று மடக்கிய ராமகிருஷ்ணன், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் பிரகாஷின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தப்பியோடிய ராமகிருஷ்ணனை தேடிய நிலையில் அணைக்கட்டு அருகே பதுங்கிக்கொண்டிருந்தது தெரிந்து ராமகிருஷ்ணனை பிடித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டதில், முன் விரோதம் காரணமாக தாக்கியதாகவும் இதனால் பிரகாஷ் உயிர் போகும் என்று நினைக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்பு ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை - கணவர் கைது!