வேலூர்: குடியாத்தம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மின்வாரியத் துறையில் பணியாற்றிவருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத சிலரின் நடமாட்டம் இருப்பதாகவும், சமூகவிரோத செயல் நடப்பதாகவும் குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குடியாத்தம் காவல் துணைக் காண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர், திடீரென சரவணன் வீட்டை சோதனை செய்துள்ளனர். சோதனையில் கறுப்பு நிறத் தாள்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்களை வைத்து சரவணன், அவரது கூட்டாளிகள் கள்ள நோட்டை தயாரித்துக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்ட ஈபி சரவணன், கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், தாமு, ரமேஷ், சிவலிங்கம், வேலு ஆகிய ஆறு பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள குச்சிப்பாளையம் சரவணன், ஆட்டோ மூர்த்தி, ரசாயனத்தை கொடுத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாங்கிச் சென்ற குமார், மோகன் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளைம் பகுதியைச் சேர்ந்த சரவணன் யாரிடம் இருந்தோ பணம் கொடுத்து கள்ள நோட்டு தயாரிக்கும் தாளை வாங்கியிருக்கிறார்.
இதை என்ன செய்வது எனத் தெரியாமல், என்னிடம் உள்ள தாள் கெமிக்கல் போட்டால் கள்ள நோட்டாக மாறும், இதை மாற்றித் தரும்படி கொல்லமங்கலத்தைச் சேர்ந்த அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். மாற்றித் தந்தால் ஒரு பங்குத் தருவதாக குச்சிப்பாளையம் சரவணன் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அசோக்குமார் (கோவாவில் ஒப்பந்த வேலை செய்துவருகிறார்) தனது உறவினரான குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ஜீவா நகரைச் சேர்ந்த ஈபி சரவணிடம் சென்று எடுத்துக் கூற, இதை நான் செய்துகொடுப்பதாக சரவணன் கூறியுள்ளார்.
இந்தத் தகவலை அறிந்த வெங்கட்டாபுரம் மோகன், ஸ்டுடியோ வைத்துள்ள குமார் ஆகியோர் எங்களிடம் கறுப்பு நோட்டை கள்ள நோட்டாக மாற்றும் மூலப்பொருள் இருப்பதாகக் கூறி சரவணிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு மூலப்பொருள்களைக் கொடுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்தே ஜீவா நகரில் உள்ள ஈபி சரவணன் வீட்டில், கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், தாமு, ரமேஷ், சிவலிங்கம், வேலு ஆகிய ஆறு பேர் கறுப்பு நோட்டை, கள்ளநோட்டாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரகசிய தகவலின்படி சிக்கிக் கொண்டனர்.
இதையும் படிங்க:Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது