வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி (50). தற்போது, இவர் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்றிரவு (பிப்.16) சுப்பிரமணி மதுஅருந்திவிட்டு வந்து தனது மகளை திட்டியுள்ளார்.
இதனை இளையமகன் வினோத் (25) தட்டிகேட்ட போது தந்தை - மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை கொண்டு வினோத்தை சுட்டுள்ளார். இதில், வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சுப்பிரமணி அங்கிருந்து தலைமைறைவாகியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வினோத்தின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியை தேடிவந்தனர். இந்நிலையில், சுப்பிரமணி அடுக்கம்பாறை பகுதியில் சுற்றி திரியும் போது ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு