வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும் மதுபானக்கடைகளை அகற்றகோரி இந்து முன்னணி சார்பில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், "ஸ்டாலின் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மாதர்ஷா பள்ளிகள், அரசு உதவி பெறுகின்ற உருது பள்ளிகளுக்கு சென்று இஸ்லாமியர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று உருது படிப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் தமிழ் மொழியை படிப்பதற்கு விலக்கு அளித்துள்ளார்கள். இது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் அளிக்கப்பட்ட அநீதி அதிமுக, திமுக இருகட்சிகளும் தமிழ் மொழியை தமிழ்நாட்டில் அனைவரும் கற்க வேண்டும் என்ற சட்டத்தை தீவிரப்படுத்தவேண்டும். இதற்கான வலிமையான கண்டனத்தை திமுகவிற்கு இந்து மக்கள் கட்சி தெரிவிக்கிறது.
மேலும், நம்முடைய தமிழ்நாடு மாணவர்கள் தாய் மொழியில் கல்வி பயில வேண்டும் ஆனால் இங்கு தாய் மொழியில் பயிலமாட்டேன் என்று நீதிமன்றம் சென்றுள்ளனர். இதற்கு திமுக சட்ட உதவி செய்துள்ளது. இவர்கள் கூறுகிறார்கள் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று ஆனால் 2006ஆம் ஆண்டில் திமுக பிறப்பித்த ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் விலக்கு வாங்குகிறார்கள். அதற்கு நீங்கள் 5 ஆண்டுகள் விலக்கு அளித்துள்ளீர்கள். இதை திசை திருப்ப திருமாவளவன் உருது, அரபி படித்து இஸ்லாமியனாக மாறுவேன் என்று அறிவித்துள்ளார். இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி கொடுமைகளுக்கு தீர்வு என்று கூறி டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். திருமாவளவன் விரைவில் மதம் மாறப்போவதாக அறிவித்துள்ளார். எனவே அவர் வேண்டுமென்று தமிழர்கள் மீது களங்கம் கற்பிப்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். திருமாவளவன் அரபு மொழி ஆதரவாளரா, தமிழர்களுக்கு ஆதரவாளரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.