வேலூர்: ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய பந்த் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து செல்லக்கூடிய அரசு, தனியார் மற்றும் ஆந்திர மாநில அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோதல் காரணமாக ஆந்திர செல்லும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம்: ஆந்திர, அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று (ஆகஸ்ட் 4) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்கள் சந்திரபாபு வருகைக்கு எதிராக (சந்திரபாபு கோ பேக்- Chandirababu Go Back) முழக்கத்தை எழுப்பியுள்ளனர்.
இதனால் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களுக்கும் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரும் இந்த மோதலில் காயம் அடைந்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டார்கள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் உலா வரும் டபுள் டெக்கர் பேருந்து… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!
இந்த மோதலால் காவல்துறை வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்களுக்கும் தீ ஊற்றி கொளுத்தி உள்ளனர். இந்த கலவரத்தை தடுப்பதற்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்திரா, சித்தூர் மாவட்டத்தில் முழுமையாக இன்றும் கடைகள் அடைப்பு மற்றும் முழு போக்குவரத்து பந்த் நடைபெற்று வருகின்றது.
திருப்பதி செல்லும் பயணிகள் தவிப்பு: இக்கலவரத்தால் வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் குடியாத்தம் கேவி குப்பம், பேரணாம்பட்டு, திருவலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் லாரிகள் செல்கின்றன.
இந்நிலையில் அங்கு நடக்கும் கட்சி கலவரத்தால் இரு தரப்பினர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் பந்த் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் வழியாக செல்லும் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
சித்தூர் மற்றும் திருப்பதி செல்லும் ஆந்திர மாநில பேருந்தின் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் ஆந்திராவில் இருந்து வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்தில்
காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லதலால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மேகதாது நில அளவைப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் - இபிஎஸ்