சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 1996 ஆம் ஆண்டு குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற அடுக்குமாடி வகையில் 642 குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன. இந்த குடியிருப்புகளை கட்டி 30 ஆண்டுகள் ஆன சூழ்நிலையில் வீடுகள் அனைத்தும் தொடர்ந்து சிதலம் அடைந்த காரணத்தினால் பொதுமக்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்பில் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவிடம் கோரிகை வைத்தனர்.
இதனையடுத்து திருவான்மியூர் குறிஞ்சி, முல்லை அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா முன்னிலையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் திருவான்மியூர் குறிஞ்சி, முல்லை அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை இன்று ஆய்வு செய்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள குடியிருப்புகள் (ETV Bharat Tamilnadu) இந்த ஆய்வில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குடியிருப்புவாசிகளிடம் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா கூறியதாவது:"குறிஞ்சி, முல்லை, மருதம் குடியிருப்புகளில் 642 குடியிருப்புகள் உள்ளன. இவை கட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த பகுதி கடல் அருகாமையில் இருப்பதால் கடல் காற்று காரணமாக அரிப்பு ஏற்பட்டு கட்டடங்கள் சிதலமடைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த வீடுகளை வீட்டு வசதி வாரியத்திடமிருந்து சொந்தமாக விலைக்கு வாங்கி விட்டனர். தற்போது அவர்கள் இந்த குடியிருப்பில் இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்ட வேண்டும் என்றால் இதில் பழைய யூ டி எஸ் விதிகளுக்கும் புதிய யுடிஎஸ் விதிகளுக்குமான முரண்பாடு இருக்கின்றது. ஆகவே இதை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வருகின்ற 12ஆம் தேதி இதே பகுதியில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் வீட்டு வசதி வாரிய ஆனைய தலைவர் பூச்சி முருகன் மற்றும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம் . அப்பொழுது 642 குடியிருப்புவாசிகளும் தவறாமல் கலந்து கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் தெரிவிக்க வேண்டும். தற்போது இந்த கட்டிடத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பலர் தங்களது இல்லத்தை காலி செய்து சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும் இந்த கட்டிடத்திலேயே குடியிருக்கின்றனர். அவர்கள் விருப்பப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இது அவர்களது சொந்த இல்லம்" எனவும் தெரிவித்தார்.