மதுரை: வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல வழக்கறிஞருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது வேங்கைவயல் கிராமம். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மனிதக் கழிவு கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் குடிக்கும் நீரில் மனிதக் கழிவை கலந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20-ஆம் தேதி ஆன்லைன் மூலமாக குற்றப் பத்திரிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மலர்மன்னன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
2022 ஆம் ஆண்டு வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் மனித கழிவு கலந்திருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து வெள்ளனுர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் வகுப்பைச் சேர்ந்த மூன்று நபரை குற்றவாளிகளாக போலீசார் பொய்யாக சித்தரித்து வழக்கில் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழக்கு விவரங்கள் குறித்து சேகரிக்கவும் வழக்கு சம்பந்தமாக அவர்களுக்கு உதவி செய்வதற்கு வேங்கைவையில் கிராமத்திற்கு செல்ல முயற்சிதேன் அனுமதிக்கவில்லை. எனவே வேங்கை வயல் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு சம்பந்தமாக உதவி செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முஹமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள், இந்த வழக்கில் மனுதாரர் குற்றவாளிகளின் வழக்கறிஞரோ அல்லது புகார் தரப்பு வழக்கறிஞரோ இல்லை. மனுதாரர் ஒரு அரசியல் இயக்கத்தை சார்ந்தவராக உள்ளார். கடந்த மாதம் குற்றவாளி ஒருவர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. மனுதாரர் வழக்கறிஞராக தனிப்பட்ட முறையில் சென்று வர எந்த தடையும் இல்லை. ஆனால் அரசியல் சார்புடைய நபர் அதிகபட்ச நபராக செல்ல அனுமதிக்க முடியாது. மேலும் அந்தப் பகுதியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெளி நபர் வருவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே மனுதாரர் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என வாதிட்டனர்.
அப்பொழுது நீதிபதி தனபால், மனுதாரர் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் ஏதேனும் வக்காலத்து பெற்றுள்ளாரா? என கேள்வி எழுப்பினார். அவ்வாறு இல்லாதபட்சத்தில் யாரைப் பார்க்க செல்கிறீர்கள்? சட்ட உதவி செய்வதாக இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய சட்ட உதவி மையம் உள்ளன என்று கூறினார். மேலும், இதில் எதுவும் இல்லாத பட்சத்தில் உங்களை எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இது தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால் காவல்துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.