தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றை இன்று (நவ.10) திறக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வேலூரிலுள்ள திரையரங்குகள், பூங்காக்கள், அரசு அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டன.
வேலூரில் புகழ்பெற்ற கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி மூடப்பட்டு, ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று (நவ.10) திறக்கப்பட்டு, அரசின் வழிகாட்டுதலின் படி கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அருங்காட்சியகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், அருங்காட்சியகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு முறையான உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
காய்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு உள்ளே வர அனுமதியில்லை. அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் கை தொடுதலுக்கு உள்ளாகும் சிலைகள், கல்வெட்டுகள், பீரங்கி போன்றவைகளுக்கும் அருங்காட்சியக வளாகத்திற்கும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அருங்காட்சியக அலுவலர் சரவணனன் கூறுகையில், "அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினமும் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை பல்ஸ் ஆக்சி மீட்டர் (Pulse Oximeter) கொண்டு சோதனை செய்யப்படுகிறது. ஊழியர்களுக்கு கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணியக்கோரியும், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றுவதை பார்வையிடக்கோரியும் உத்தரவிட்டுள்ளோம்.
அருங்காட்சியகம், பொதுமக்களின் பார்வைக்காக காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுப்பு விடப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: தியேட்டர்களை திறக்க அனுமதியளித்தும் பயனில்லை - அதிருப்தியில் ஐநாக்ஸ் குழுமம்!