தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டும், திருநெல்வேலியில் இருந்து தென்காசியும் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி அப்பகுதியினர் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அப்பகுதி வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதன்படி இன்றும், நாளையும் (25.7.2019 - 26.7.2019) அவர்கள் திருப்பத்தூர் நீதிமன்றம் வளாகத்தில் இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் ஒருவர் பேசுகையில், ”வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதன் சுற்றளவு பர்கூர் எல்லையிலிருந்து அரக்கோணம் தக்கோலம்வரை சுமார் 200 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. பொதுமக்கள் ஆட்சியரையோ அல்லது கண்காணிப்பாளரையோ சந்திக்க வேண்டுமென்றால் 100 கிலோ மீட்டருக்கும் மேல் செல்லும் நிலை உள்ளது.
அதற்காக ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டி உள்ளது. எனவே, மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு பின் திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.