வேலூர்: பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் அளிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணியானது வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று (டிச.15) நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு, மொத்தமாக 2096 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4879 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 1937 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் முதலியன வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதன் இடையே, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பிரித்து அனுப்பும் பணி இன்று (டிச 15) நடைபெற்றது.
அதன்படி, வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குக் கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் என மொத்தமாக தலா 27 இயந்திரங்களும், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் தலா 13 இயந்திரங்களும் என மொத்தம் 92 கட்டுப்பாட்டுக் கருவிகள், 92 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 92 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இயந்திரங்கள் அனைத்து பொதுமக்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாவட்ட கருவூல பாதுகாப்பு அலுவலகத்திலும், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இருப்பு வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜென்மபூமி நில விவகாரம்: ஷாஹி இத்கா மசூதியை ஆய்வு செய்யலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!