வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (32). இவர் இன்று மாலை வாணியம்பாடியில் அமைந்துள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அப்துல்லாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அப்துல்லா, தடுப்புச்சுவரின் அருகில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், விபத்தைக்கண்டு உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகரக் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.