வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரிபகுதியைச் சேந்தவர் மோகன் (62). இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசுக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், ஏப்ரல். 18 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்துக் காண்பிக்க கூறியதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார். அதில் ஏற்பட்ட தீ பொறி கடையில் உள்ள பட்டாசுகள் மீது விழுந்து வெடிக்கத் தொடங்கியது.
அப்போது, மோகனின் இரு பேரக்குழந்தைகள் தனுஜ் (8), தேஜஸ்(7) பயந்து கடைக்குள் ஓடியுள்ளனர். கடைக்குள் ஓடிய பேரன்களை காப்பாற்ற முயன்ற போது மோகனும் கடைக்குள் சிக்கியுள்ளார். அதற்குள் பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டதால் மோகன், அவரது மகள் வழி பேரக்குழந்தைகள் இருவர் என மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்த சிறுவர்களின் தாய் வித்யா (34) மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப். 21) அதிகாலை 3 மணி முதல் வித்யா காணாமல் போனதால் பதற்றமான உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், லத்தேரி ரயில் நிலையம் அருகே பெண் சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது உயிரிழந்துகிடப்பது வித்யா என்பது தெரியவந்தது.
இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வித்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு மகன்களும், தனது தந்தையும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்த வித்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வித்யா தனது கணவரை பிரிந்து மகன்களுடன் தனது தந்தை மோகன் வீட்டில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேலூர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆட்சியர் உத்தரவு!