வேலூர்: தொரப்பாடி காந்தி தெருவைச் சேர்ந்தவர் நவ்சாத். இவருக்கு 2 பெண், 2 ஆண் என மொத்தம் 4 பிள்ளைகள். இவரது மூத்த மகள் நசியா(17) உட்பட 4 பிள்ளைகளும் நேற்று (ஜூன் 11) சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாடச் சென்றுள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாத நசியாவும், அவரது சகோதரர்களும் நீரில் இறங்கிக் குளித்துள்ளனர். நீருக்குள் சென்ற நசியா வெளியே வரவில்லை. இதைப் பார்த்த அவரது சகோதர, சகோதரிகள் கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
சத்தம் கேட்டு அப்பகுதியினர் சிறுமியை மீட்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அங்கு சென்ற அரியூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், நீரில் மூழ்கிய நசியாவை தேடினர்.
எனினும் நசியாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இன்று(ஜூன். 12) அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவி கேட்கப்பட்டது. பின்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று (ஜூன் 12) காலை 8 மணி முதல் நசியாவை தேடி வந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நசியா உடல் மீட்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்: தட்டிக்கேட்டவருக்கு அடி உதை